தமிழ்நாட்டில் நீர் நிலைகள் எத்தனை வகைகள்?
இயற்கையின் உயிருக்கு அச்சாணியாக விளங்கும் நீரை நமது முன்னோர்கள் உயிருக்கு மேலாகக் கருதி அதைப் பாதுகாத்து வந்தார்கள். அதன் வழியே பல ஆராய்ச்சிகள் செய்து தேவைக்கேற்ப, நிலத்திற்கேற்ப பல நீர்நிலைகளை வடிவமைத்து செழிப்போடு வாழ்ந்தவன் நம் தமிழன்.
யாமிங்கே நற்றமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகளின் பெயர்களை கொடுத்துள்ளோம்.படித்து மகிழவும்……
1)அகழி /உடுவை /கிடங்கு/காடி- moat-கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீரரண்.
2)அசம்பு - உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் .
இதற்கான விம்பகம் கிடைக்கப்பெறவில்லை !
3)அயம் - கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.
4)அருவி / உவிதை- water falls-மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு வீழ்வது.
5) அல்குகழி -சிறிய உப்பங்கழி நிலம்
6)ஆழிக்கிணறு-well in sea shore- கடலுக்கு அருகே தோண்டிக்கட்டிய கிணறு.தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது
7)அளக்கர்-அளக்க முடியாத நீர் நிலை- கடல். கடல் என்னும் சொல்லுக்கு பெருமளவான ஒத்த சொற்கள் தமிழில் உள்ளன
8)அள்ளல்-சேறு பொருந்திய நீர்ப் பள்ளம்
9)ஆறு- river- பெருகி ஓடும் நீர்.
10)இலஞ்சி/ இலந்தை-reservoir for drinking &
other purpose- பல வகைப் பயன்பாட்டுக்கு பயன்படும் நீர்த் தேக்கம்.
11)உறை கிணறு- ring well- மணற்பாங்கான இடங்களில் குறிப்பாகச் சோழநாட்டின் ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் உறைக்கிணறு என்றழைக்கப்பட்டது. மணலில் தோண்டுவது எளிதன்று. மணல் சரிந்துக்கொண்டே இருக்கும்.
களிமண் வட்டைகள் செய்து சுட்டு அவற்றை உறைகளாகப் பயன்படுத்தியுள்ளனர். மேற்பகுதி மண்ணைத் தோண்டியெடுத்துவிட்டு மணல் பகுதியில் வட்டையை வைப்பர். வட்டையின் உட்பக்கமுள்ள மணலை தோண்டியெடுப்பர். உறை கீழே இறங்கும். பின் அடுத்த உறையை வைப்பர். உறையின் வாய்ப்பகுதி சற்றே பெரிதாகவும் வால்பகுதி அதனுள் செல்லுமாறும் இருக்கும். உறைக்குள் இருக்கும் மணலை தோண்டுவர். இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் சுரக்குமளவுக்குப் பல உறைகளை இறக்கிக் கொள்வர்.
12)ஊருணி-drinking water tank- மக்கள் பருகும் நீர் நிலை.
13)ஊற்று- spring-பூமிகடியிலிருந்து நீர் ஊறுவது.
14)ஏரி /ஏல்வை- irrigation tank-வேளாண்மை பாசன நீர்த் தேக்கம்.
15)ஏந்தல்-வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை.
16)ஓடை -brook-அடியிலிருந்து ஊற்று எடுத்து எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
17)கட்டுக்கிணறு-well built in rock- சரளை நிலத்தில் வெட்டி கல்,செங்கல் இவைகளால் சுவர் கட்டிய கிணறு.
18)கண்மாய்- irrigation tank-பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
19)கலிங்கு- sluice with many
ventures- ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பல கதவுகளால் திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
20)கயம் – சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
21)கழி/உப்பங்கழி /காயல் /கடல்வாய்க்கால் /களப்பு- Lagoon -
கடலில் மிகப்பெரிய ஆழமில்லாத இடம்/ கடல்நீர் பாய்ந்து தேங்கிய மிகப்பெரிய நீர்நிலை.
எ.கா: நந்திக்கடல்
22)கழிமுகம்/சங்கமுகம்/ கயவாய் / முகத்துவாரம் /கடற்கழி- ஆற்று நீர் கடலுடன் சங்கமிக்கும் இடம்.
23)காராளன் கிணறு- அகலமான கிணறுகள் மட்டுமன்றி ஆழமான கிணறுகளும் நம்மிடம் இருந்தன.
‘நெடுங் கிணற்று வல் ஊற்று உவரி தோணி’
– (97-98) பெரும்பாணாற்றுப்படை
இவ்வரி தொண்டை மண்டலத்தில் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றைப் பற்றிக் கூறுகிறது. இதேபோல் கிணறு வெட்டும் ஆடவர்கள் தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி பாலை நிலத்தில் கிணறு தோண்டியிருந்த காட்சியை
‘வன்புலம் துமியப் போகிக்…’
-அகநானூறு (79:6)
என விவரிக்கிறது. ஆனால் இவ்விரு பாடலுமே ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. இப்படித் தோண்டப்பட்ட கிணற்றில் உவர்நீர்தான் கிடைத்தது என்பதே அது. இது பாறையின் தன்மையினால் ஆனது. இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வறண்ட பகுதிகளில் ‘காராளன் கிணறு’என்றழைக்கப்படும் பாசனக் கிணறுகள் உள்ளன.
24)கால்- channel-நீரோடும் வழி.
25)கால்வாய்-supply channel to a tank-
நீர், குளம் ,ஊருணி முதலியவற்றிற்கு நீரூட்டும் வழி.
26)கிணறு-well- இல்லங்களில் தனியாக நீர் எடுக்கும் இடம்.
27)கீழாறு- Underground stream-
பூமியினுள்ளோடும் ஆறு
28)குட்டம்- large pond-பெருங் குட்டை.
29)குட்டை-small pond- சிறிய குட்டம் /மாடு முதலியன குளிப்பாடும் நீர் நிலை.
30)குடா-bay- மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒர் நிலப்பரப்பு.
எ.கா: வங்காள விரிகுடா, யாழ் குடா
31)குண்டம்- small pool-சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
32)குண்டு- pool-குளிப்பதற்கேற்ற சிறு நீர் நிலை.
33)குமிழி-rock cut well- நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடைகிணறு.
34)குமிழி ஊற்று- artesian fountain- அடிநிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
35)குளம்/ அலந்தை/படுகர் /கிடங்கு -bathing
tank- ஊர் அருகே மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
36)கூவம்- abnormal well-ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
37)கூவல் / பயம்பு- hollow-ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
38)கேணி- large well-அகலமும் ஆழமும் நிறைந்த ஒரு பெருங்கிணறு.
39)சமுத்திரம்-ocean- மிகப்பெரிய நீர்நிலை. இச் சொல்லுக்கு தமிழில் பெருமளவு ஒத்த சொற்கள் உள்ளன.
40)சாக்கடை-drainage- கழிவு நீர் கொண்டு செல்லும் வழி.
41) சிற்றாறு-Rivulet -மிகச்சிறிய ஆறு
42)சிறை/அணை-reservoir- தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.
43)சுணை-mountain pool-மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை.
44)சேங்கை- tank with duck weed-பாசிக்கொடி மண்டிய குளம்.
45)தடம்-beautifully constructed
bathing tank-அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
46)தருவை – மிகப்பெரிய ஏரி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwCI3-ILIQl3I-8dcfRAkqoPzSAkoE665SakP2qqLEkcRjT_ZmBR2U33-1EAkLHpt6n8V52AL41gKkJv7fRNkRS_0GI-27e2ao-4_T8Lcg5AwKhUtCTLElAQgtpDWGoyI_b-Gh5Hlr3Io1/s1600-rw/46.jpg)
48)தாங்கல்- irrigation tank- இப்பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.
49)திருக்குளம் - temple
tank- கோயிலின் அருகேயமைந்த தெப்பக்குளம்.
50)தீவு- island- நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பரப்பு.
51)துரவு -தோட்டஞ் செய்வதற்காகத் தோண்டப்பட்டவை. இதன் நீள அகலம் 1:1, 1:2, 1:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
52)துலவாக்குழி -காவிரி கடைமடைப் பகுதியில் ஆற்றோரத்தில் தோண்டப்பட்டுக் காய்கறி பாசனத்துக்குப் பயன்பட்ட கிணறு. துலவம்என்பது ஏற்றத்தில் பயன்படும் நீண்ட மரத்துண்டைக் குறிக்கும்.
53)தெப்பக்குளம்-temple tank with inside
pathway along parapet wall-ஆளொட்டியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
54)தொட்டி-tank- பயன்பாட்டுத்தேவைக்கான நீர் சேமித்து வைக்கப்படும் பொருள்.
55)தொடுகிணறு-dig well- ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர்கொள்ளும் இடம்.
56)நடைகேணி /நடைகிணறு -large wells
with steps on one side- இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
57)நீர்த்தம்பம்/ காரானை -water sprout-பெருமழை சிறு சுழற்காற்றுப் போல கொந்தளித்து நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkEhUPJs81ffBgT-iTlOBqKOIskLBLvujEZY64cVh67swdWaohuM67pPOQNpoMzz05JNOpN1fzW3m03LvulM5h1pv4r2BwqFeVSOOmZiScPNnQ2eqIrPhBRob6rKxoCHkp0_tOfQoFG_z/s1600-rw/57.jpg)
59)நீரிணை- straight-இரு பெரிய நிலப்பரப்புக்கு நடுவே செல்லும் ஆழமற்ற நீர்ப்பகுதி.
எ.கா: பாக்கு நீரிணை
60)பல்வலம்/ சிறுகுளம் /வாவி- A small walled tank or
reservoir - சிறிய குளம்.
61)பிள்ளைக்கிணறு-well in
middle of a tank-குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
கயிறுகுறு முகவைமூயின மொய்க்கும்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
கயிறுகுறு முகவைமூயின மொய்க்கும்
- (மூன்றாம் பதிற்றுபத்துப் பத்து - பாட்டு 22: 12-14)
கரும்பொன் எனும் இரும்புக் கோடரியால் வன்மையான பாறை நிலத்தை உடைத்து தோண்டப்பட்டமையால் கற்பாறைகள் ஒழுங்கின்றி உடைந்து சிதறி சிறிதளவே நீர் ஊறுகிறது. அதில் முகவை எனும் மரத்தால் செய்த நீர் முகக்கும் கருவி ஒரு நீளமான கயிற்றால் பிணைக்கப்பட்டு நீர் இறைக்கப்படும் காட்சி விளக்கப்படுகிறது. இங்குள்ள பத்தல் எனும் சொல் கவனத்துக்குரியது. இதை உட்கிணறு எனக் கொள்ளலாம். மேலே அகலமாக அகழ்வதைக் கூவல் என்றும் அக்கூவலுக்குள்ளே ஆழமாய் அகழ்வதைப் பத்தல் என்றனர். இது கொங்குப் பகுதியில் பிள்ளைக் கிணறு என்று அழைக்கப்பட்டது.
62)பூட்டைக் கிணறு- பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாச்சும் அமைப்புள்ள கிணறு. ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சும்போது ஏற்றம், குற்றேற்றம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆளேற்றம் என இவற்றில் பலவகைகள் இருந்தன.
சுருங்கச் சொன்னால் சாதாரண கிணற்றில் பல வகையான நீரேற்று கருவிகளைப் பயன்படுத்துதல்.
63)பொங்கு கிணறு- well with bubbling
spring-ஊற்றுக்கோல் கொப்பளித்துகொண்டே இருக்கும் கிணறு.
64)பொய்கை/ தாமரைக்குளம் /தடாகம்/நளினி - Lotus
tank - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர் நிலை.
65)மடு-deep place in a river- ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
66)மடை-small sluice with single
ventures-ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
67)மதகு/வான்கதவு -sluice with
many ventures- பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
69)மோட்டை-குளம் வற்றிய பின் ஆங்காங்கே எஞ்சியிருக்கும் நீர் சிறிய குட்டை போன்று காட்சியளிப்பது.
70)வலயம்-round tank -வட்டமாய் அமைந்த குளம்
71)வாய்க்கால்- small water source -வீடுகளுக்கருகே நீர் கொண்டு செல்லும் வழி.
72)வாளி- stream-ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி மறுகால்வழி அதிக நீர்வெளிச்செல்லுமாறு அமைந்த நீர்நிலை.
மிகச் சரியாக என்னால் பொருள் கொள்ள முடியாத நீர்நிலைகள்:
1. கோட்டகம் - ஆழமான நீர்நிலை /கரை.
2. உவளகம்- அந்தப்புரம், அகழி, உப்பளம் ,பள்ளம், குளம்
3. சூழி - கடல், குளம், சுனை
4. பணை -நீர்நிலை
5. உவன்றி -நீர்நிலை
6. உவறு- நீர்நிலை
No comments:
Post a Comment